வனஹபுவ கல்வி அபிவிருத்திச் சங்கம் (வெடா), “அறிவால் உயர்ந்த உன்னத கிராமம்” என்ற தூர நோக்கின் கீழ் அமைத்துள்ள ஐந்து நோக்கக் கூற்றுக்களுள் ஒன்றான, “பாடசாலை கல்வியின் சிறந்த அடைவு” என்ற வேலைத் திட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டிலிருந்து தரம் 3 – 11 வரையான மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளை நடத்தி வருகின்றது.
அதில் பின்வரும் இடர்பாடுகளும் பின்னடைவுகளும் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
1. மாணவர்களின் வரவு குறைவு.
2. தொடர்ச்சியான வரவின்மை.
3. மெல்லக் கற்போரின் வரவு குறைவு.
4. பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாமை.
5. பாடசாலையில் வழங்கப்படும் வீட்டு வேலைகளைச் செய்வதற்கு நேரமின்மை.
6. ஆசிரியர் பற்றாக்குறை / வரவுப் பிரச்சினை.
7. மாணவர்களிடம் போதியளவு பாட அடைவு காணப்படாமை.
8. பெற்றார் அக்கறையின்மை.
9. மின்சாரத் தடை.
இந்நிலையில் தொடர்ந்தும் பழைய முறையிலேயே வகுப்புகள் நடத்துவதால் பயன்மிகக் குறைவு எனக்கண்டு வெடா நிருவாகம் மாற்றுத் திட்டமொன்றை யோசித்துள்ளது. இதன் முதற் கட்டமாக தரம் 3-5 வரையான தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விஷேட கற்பித்தல் முறை நடைமுறைப்படுத்தப்படும்.
மெல்லக் கற்போர்
மாணவர்கள் மூவகையினர்.
1. மீத்திறன் மாணவர்கள்.
2. சராசரி மாணவர்கள்.
3. மெல்லக் கற்கும் மாணவர்கள்.
இவர்களுள் மீத்திறன் மாணவர்கள் உபகார வகுப்புகள் இல்லாமலேயே கற்றுக்கொள்வர். அவர்களுக்கு பாடசாலையின் வகுப்பறை வழிகாட்டலே போதுமானது. அவர்கள் பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை, பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வர்.
சராசரி மாணவர்களுக்கு உபகார வகுப்புகள் பயனளிக்கும். ஆனால், அவர்களும் ஊக்கப்படுத்தப்பட்டால், முயற்சி செய்தால், கற்றலில் தம் ஈடுபாட்டை அதிகரித்ததால், அதிக பயிற்சிகள் செய்தால் உபகார வகுப்புகள் இன்றியே பாடங்களில் அதிக புள்ளிகளை, பெறுபேறுகளைப் பெறுவது சாத்தியமானதே.
ஆனால், மெல்லக் கற்கும் மாணவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கே உபகார வகுப்புகள் அவசியப்படுகின்றன. எனினும், இன்று நிலைமை மாறியுள்ளது. உபகார வகுப்புகளுக்குச் செல்வோர் மீத்திறன் மாணவர்களும் சராசரி மாணவர்களுமாகவே இருக்கின்றனர்.
மெல்லக் கற்கும் மாணவர்கள் உபகார வகுப்புகளுக்குச் செல்வதில்லை. அவ்வாறு சென்றாலும்கூட அவர்களது கல்வி அடைவில் முன்னேற்றம் காணப்படுவதில்லை.
அதற்குக் காரணம் உபகார வகுப்புகளில் மேற்கூறிய மூவகை மாணவர்களும் காணப்படுவதால் ஆசிரியர்கள், மெல்லக் கற்போரைத் தவிர்த்து மீத்திறன், சராசரி மாணவர்களை இலக்காகக் கொண்டே பாடம் நடத்துகின்றனர். இது அவர்களால் தவிர்க்க முடியாத விடயமாக உள்ளது.
எனினும், கற்றல் -கற்பித்தல் செயல்முறையில் ஆசிரியர்களால் அதிகம் கவனிக்கப்பட வேண்டியவர்கள் மெல்லக் கற்கும் மாணவர்களேயாவர்.
ஏனெனில், அவர்களால் சுயமாகக் கற்க முடியாது. ஒரு துணையின் உதவியுடனேயே கற்க முடியும். எனவே, அவர்கள் சுயமாகக் கற்கும் நிலையை அடையும் வரை ஆசிரியர்கள் அவர்களுக்கு ஊன்றுகோல் போல் துணை நிற்க வேண்டியுள்ளது.
எண்ணும் எழுத்தும் வேலைத்திட்டம்
இதன் அடிப்படையில் மெல்லக் கற்போரை இலக்காகக் கொண்டு, “எண்ணும் எழுத்தும்” என்ற ஒரு வேலைத்திட்டம் முன்வைக்கப்படுகிறது.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது நாம் அறிந்த உண்மையாகும். எனவே, இத்திட்டத்தின் மூலம் பிள்ளைகளின் கல்விக் கண்களைத் திறந்து விடும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
மெல்லக் கற்போர் எல்லாப் பாடங்களிலும் பின்தங்கியிருப்பதற்கு பிரதான காரணம் அவர்கள் மொழிப் பாடத்திலும் கணிதப் பாடத்திலும் பின்தங்கியிருப்பதாகும். அவற்றில் முன்னேறுகின்ற போது ஏனைய பாடங்களைக் கற்பது இலகுவானதாக அமையும்.
மொழிப் பாடத்தின் பிரதான திறன்களான கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து என்பவற்றில் அந்தந்த தரத்திற்குரிய அடைவைப் பெறாதவிடத்து, அடுத்தடுத்த தரங்களில், வகுப்புகளில் அவர்கள் பின்தங்கிவிடுவது தவிர்க்க முடியாத குறைபாடாக அமைகிறது.
அதைப் போலத்தான் கணிதத் திறன்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவற்றில் அந்தந்த தரத்திற்குரிய அடைவைப் பூரணமாகப் பெறாத போது அடுத்தடுத்த வகுப்புகளில் கணிதப் பாடம் கசப்பான பாடமாக அமைவது சாதாரணமானதே.
இவ்விரண்டு அடிப்படை பாடங்களுக்கும் அழுத்தம் கொடுத்து உரிய திறன்களை முழுமையாகப் பெறுவதற்கு வழி காட்டுவதே, “எண்ணும் எழுத்தும்” திட்டத்தின் நோக்கமாகும்.
அவ்வகையில், தரம் மூன்றில் ஆரம்பிக்கும் இத்திட்டத்தின் மாணவர்கள் தரம் ஆறை அடைகின்ற போது சராசரி மாணவர்களின் அளவுக்காவது மொழி மற்றும் கணிதப் பாடங்களில் தேர்ச்சி பெற்றுக்கொள்வர். ஏனைய மாணவர்களுக்குச் சமமாக வகுப்பறையில் கற்பார்கள். அதாவது, பாடசாலையில் வனஹபுவ மாணவர்கள் யாரும் மெல்லக் கற்போர் என்ற நிலையில் தரம் ஆறிலிருந்து இருக்க மாட்டார்கள்.
இத்திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் 2033ஆம் ஆண்டிலிருந்து க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் வெடா மாணவர்கள் 100 வீதம் சித்தி பெறுவார்கள். (இன்ஷா அல்லாஹ்)
திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பதாயின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், திட்டமிடல் குழு, அனுசரணையாளர்கள் ஆகிய தரப்புக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமாகும்.
மாணவர்கள், பெற்றோர்கள்
மாணவர்கள் மெல்லக் கற்போர் என இனங்காணப்பட்டு அவர்களுக்கான உபகார வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படுகின்ற போது அவர்கள் தாழ்வு மனப்பான்மை காரணமாக இவ்வகுப்புகளைப் புறக்கணிக்க இடமுள்ளது.
பெற்றோரும் கூட தமது பிள்ளைகள் ஏனைய பிள்ளைகளை விடப் பின்தங்கியவர்கள் என இனங்காட்டப்படுவதை விரும்பமாட்டார்கள்.
அதனால், அவர்களது ஒத்துழைப்பைப் பெறுவதும் சிரம சாத்தியமானதாக அமையலாம். எனவே, இத்திட்டத்தை ஆரம்பிக்க முன் பெற்றோர்களுக்கு இத்திட்டம் பற்றிய தெளிவூட்டலும், வழிகாட்டலும் செய்யப்பட வேண்டும்.
மெல்லக் கற்போர், பின்தங்கிய மாணவர்கள் போன்ற சொற்பிரயோகங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. அதனால் தான், “எண்ணும் எழுத்தும்” திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இம்மாணவர்கள் வீட்டில் வழிப்படுத்தப்படுவது அவசியமாக உள்ளதால் பெற்றோர் அதற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
திட்டமிடற் குழு
திட்டமிடற் குழுவினர் தமது திட்டங்களை இயன்றளவு சிறந்த முறையில் செய்ய வேண்டும். ஏனெனில், சரியான திட்டமிடலே செயன்முறையின் பிரதான அம்சமாகக் காணப்படுகிறது.
திட்டமிடலின் போது கள ஆய்வு, மாணவர்கள் -பெற்றோர் தெளிவூட்டல், எதிர் கொள்ளும் பிரச்சினைகள், மாற்றுப் பரிகாரங்கள், திருத்தங்கள், மாற்றங்கள் செய்வதற்கான ஒழுங்குகள், ஆசிரியர்களுக்கான தொடர் வழிகாட்டல், ஊக்குவிப்புகள், திட்டத்தைச் செயல்படுத்தல், கண்காணித்தல், வசதிகளை மேம்படுத்தல் போன்ற இன்னோரன்ன விடயங்களை உள்ளடக்கியதாக திட்டமிடல் அமைய வேண்டும். அத்துடன் இக்குழு செயற்களத்திலிருந்து விலகிவிடாது தமது பணியைத் தொடர வேண்டும்.
ஆசிரியர்கள்
திட்டத்தின் பிரதான பங்காளிகளாக ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். ஏனெனில், அவர்களே மாணவர்களுடன் நேரடியாகப் பங்கேற்பு செய்யக்கூடியவர்கள்.
அதனால், அவர்கள் இத்திட்டத்தை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். இத்திட்டம் பற்றிய நேர்மனப்பாங்கு உடையவர்களாக இருக்க வேண்டும். மிகுந்த பொறுமையாளர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், மெல்லக் கற்கும் மாணவர்களின் அடைவுகளைக் காண்பது விரைவில் நடக்க மாட்டாது. நீண்ட காலம் தேவைப்படும். மீத்திறன் மாணவர்களுக்கு ஒரு முறை சொல்லக்கூடிய விடயத்தை மெல்லக் கற்போருக்கு பத்து முறை சொல்ல வேண்டும். அதுவும் போதாதவிடத்து மேலும் சொல்லத் தயாராக இருக்க வேண்டும்.
மெல்லக்கற்போரிடம் உள்ள பிரதான குறைபாடு அவர்கள் கற்றலில் ஆர்வம் இன்றி இருப்பதாகும். அவர்களது நாட்டம் வேறு விடயங்களிலேயே அதிகம் காணப்படும். அதற்கான காரணம் அவர்களது உடல், உளத் திறன்கள் அதற்கான இசைவாக்கமுடையதாக இருத்தலாகும்.
எனினும், ஆரம்பத்தில் கூறியது போல எண்ணும் எழுத்தும் அனைவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய அடிப்படை திறன்களாகும். ஒரு மாணவன் பரீட்சைகளில் சித்தி பெறாமல் போகலாம். அவன் ஒரு தொழிலாளியாக, சாரதியாக, விளையாட்டு வீரனாக, விவசாயியாக… யாராக வேண்டுமானாலும் வரலாம். ஆனால், அவன் அறிவைத் தேடிப் பெறும் குறைந்தளவு தகுதியும் இல்லாதவனாக இருக்க முடியாது. இத்தகையவர்களை அல்குர்ஆன் மிருகங்களுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறது.
எனவே, ஆசிரியர்கள் கொஞ்சம் அல்ல அதிகமான பொறுமை உடையவர்களாக இருந்து, புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு, பரிசுத் திட்டங்களை முன்வைத்து, அன்புடன் அரவணைத்து அவர்களை கற்கும் திறன் கொண்டவர்களாக மாற்ற வேண்டும். அவர்களை மீத்திறன் மாணவர்களாக மாற்ற முடியாது. சராசரி மாணவர்களாகவும் சிலபோது மாறமாட்டார்கள். ஆனால், பாமரர் என்ற நிலையில் இருந்து நிச்சயம் அவர்களை மாற்ற முடியும். (இன்ஷா அல்லாஹ்)
அனுசரணையாளர்கள்
இத்திட்டத்திற்கென தனியான அனுசரணையாளர்கள் இருந்தால் மிகவும் நல்லது. நிதி அனுசரணை மட்டுமன்றி ஆசிரியர்களுக்கான உதவியாளர்களாக, மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உதவிகள் செய்பவர்களாவும் இருக்கலாம். அப்போது திட்டத்தைச் செயல்படுத்துவது இலகுவானதாக அமையும்.
நோக்கம்
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான இத்திட்டத்தின் நோக்கம், அவர்களும் ஏனைய மாணவர்களைப் போல பாடசாலைக் கல்வியில் சிறந்த அடைவை நோக்கி இட்டுச் செல்லலாகும்.
முதலாவது, அவர்கள் சிறந்த மொழித் தேர்ச்சிகளை பெற்றுக்கொள்வர். அதனூடாக, ஒரு விடயத்தை அவதானமாகக் கேட்கவும், வாசிக்கவும், கேட்டும், வாசித்தும் கிரகித்துக் கொள்ளவும், கிரகித்தவற்றை பேச்சிலும், எழுத்திலும் வெளிப்படுத்தவும் முடியுமானவர்களாக மாற்றுவதேயாகும். இத்திறன்கள் அவர்களிடம் வளர்க்கப்படுகின்ற போது அவர்களால் மொழிப் பாடத்தில் மட்டுமன்றி ஏனைய பாடங்களிலும் திறமை காட்டக்கூடியவர்களாக மாறுவர்.
பரீட்சைப் புள்ளிகள் அடிப்படையில் கூறுவதாயின் அவர்களால் நாற்பது புள்ளிகளுக்கு மேல் பெறக்கூடியதாக இருக்கும்.
மொழித் திறன் போல வித்தியாசமான வேறொரு திறன்தான் கணிதத் திறன். எனவே, கணிதத்திற்கென்று பிரத்தியேகமான பயிற்சித் திட்டங்கள் செய்யப்பட வேண்டும்.
கணிதத்தின் அடிப்படை திறன்களும், கணித எண்ணக் கருக்களும் சரியாக அவர்களின் மனதில் பதியும் போது, கணிதப் பாடம் கஷ்டமான பாடமாக இருக்காது. மாறாக, விருப்புக்குரிய பாடமாக மாறிவிடும்.
மெல்லக் கற்போர் இவ்விலக்கை அடைகின்ற போது கிராமத்தின் அனைத்து மாணவர்களும் கல்வியில் சிறந்த அக்கறை காட்டக்கூடியவர்களாக மாறிவிடுவார்கள். அதாவது, பாடசாலைக் கல்வியில் சிறந்த அடைவு என்ற நோக்கம் இனிதே நிறைவேறும். இல்லாத போது O/L இல் 9W என்பது தவிர்க்க முடியாததாகப் போய்விடலாம்.
இங்கு இன்னொரு சந்தேகம் எழலாம். மொழியும், கணிதமும் மட்டும் கற்பிப்பதால் ஏனைய பாடங்களில் எப்படி சித்தியடையலாம் என்பது தான் அது.
பாடங்களைக் கற்பிப்பது, பரீட்சைகளில் புள்ளிகளை அதிகரிப்பது என்பன பாடசாலையின் வேலைத்திட்டமாகும். அந்த திட்டத்துக்கு உதவியாக, உறுதுணையாக, அனுசரணையாக இருப்பதே வெடாவின் பணி.
அந்த வகையில் குறைந்த புள்ளிகள் பெறக்கூடியவர்கள் என இனங்காணப்படுவோருக்குத் தேவையான பரிகார நடவடிக்கையே மேற்கூறிய செயற்திட்டம். இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கின்ற போது மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் நல்ல முறையில் கற்பார்கள். ஏனெனில், பாடசாலையில் எல்லாப் பாடங்களும் நடைபெறுகின்றன. அதற்கான சகல ஏற்பாடுகளும், ஆசிரியர்களும், வளங்களும் அங்கே காணப்படுகின்றன.
மெல்லக் கற்போருக்காக நாம் தயாராக வேண்டிய செயற்பாடுகள் சில:
1 . தமிழ் மொழியின் நான்கு திறன்களின் விருத்திக்கான செயற்பாடுகள்.
✔கேட்டல், பேச்சு
1. படம் பார்த்துப் பேசுதல்.
2. படம் பார்த்து கதை கூறுதல்.
3. கதை கூறுதல்.
4. சம்பவ விபரிப்பு.
5. நடப்பு விவகாரங்கள்.
6. தகவல்கள்.
7. கற்பனைகள்.
✔வாசிப்பு, எழுத்து
1. எழுத்துக்கள்
2. ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்துச் சொற்கள்.
3. நீண்ட சொற்கள்
4. பெயர்ச் சொல், வினைச் சொல்
5. சிறு வாக்கியங்கள்
6. நீண்ட வாக்கியங்கள்
7. வாசிப்பு அட்டைகள்
8. உறுப்பமைய எழுதுதல்.
9. சொல்வதெழுதுதல்.
10. சிறிய பந்திகள்.
11. சிறிய கதைகள்
12. சிறிய கட்டுரைகள்
✔ கணிதச் செயற்பாடுகள்
1. இலக்கங்களை எண்ணுதல்.
2. இலக்கங்களை இலக்கத்தில் எழுதுதல்.
3. இலக்கங்களை எழுத்தில் எழுதுதல்.
4. சிறிய எண்களையும் பெரிய எண்களையும் இனங்காணல்.
5. எண்களுக்கு முன், பின் வரும் எண்கள்.
6. கூட்டுதல், கழித்தல் – ஓரிலக்கம், ஈரிலக்கம், மூவிலக்கம், மீதம் வரக்கூடியவை.
7. பெருக்குதல், வகுத்தல்
8. வசனக் கணக்குகள்